Thursday, August 31, 2006

தொலைந்துபோனவன்


தெருவில் இறங்கி நடக்கையில்
தெருகோடியை பார்க்கிறேன்
நீ இருந்தாய் என்ற பழமையும்
நீ இல்லை என்ற வெறுமையும்
ஆறிவறும் காயத்தில் நகம்
கீறியதுபோல் துடித்தேன்

இடி ஓசைக்கு பயந்து உன்
மடி தேடியவன் நான், என்னை
பொடியாகி போவாய் என
முன்பே சபித்திருந்தால் உன்
மடியோடு மரித்திருப்பேன்

தலைவியினை அணைத்து புரளும் வயதில்
தலையணை அணைத்து புலம்புகிறேன்
உன்னோடு போக வேண்டிய இடத்திற்கெல்லாம்
என்னை தனியாக போகும்படி செய்தது சரியா

நீரை தொலைத்த நதியாய்
நீண்ட என் கரைகள்
காய்ந்த நதியின் மடியில்
காலாற நடந்தவர் கூறினர்
"எவ்வளவு பரந்த மணல்வெளி " என்று
அத்தனை நாள் ஓடியபடி
அங்கு வாழ்ந்த ஜீவநதியின்
ஆயுள் முடிந்துபோனதை
அறிவாறோ யாரேனும்

தொலையும்வரை அதன் அருமை தெரியாது
தொலைத்த உன்னை மீட்க வழியும் கிடையாது
தொலைந்துபோனது போகட்டும் பெண்ணே
தொலைத்தவன் கேட்கிறேன் சொல் கண்ணே, நாண்
தொலைத்தது உன்னையா என்னையா

தொலைத்திட்ட உன் சுயத்தை
தேடி கொடுத்தவன் நாண்
மறந்திட்ட உன் வெட்கத்தை
மீட்டு எடுத்தவன் நாண்
உன்னை உனக்கு அன்று
உணர்த்திய நாண்
என்னை எனக்கே இன்று
எதிரியாய் உணர்கிறேன்

1 comment:

அகிலா said...

நல்ல கவிதை... நான் மிகவும் ரசித்த வரிகள் இவை

//தொலைந்துபோனது போகட்டும் பெண்ணே
தொலைத்தவன் கேட்கிறேன் சொல் கண்ணே, நாண்
தொலைத்தது உன்னையா என்னையா//


நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வில்லையெனில், "நாண்" --> "நான்" திருத்தினால் நன்றாக இருக்கும்.