Thursday, September 14, 2006

மருதக்காதல் மறந்ததேனோ


வெற்று பாத்திரம்
சுமக்கும் அடுப்பில்
சமைக்க எதுவுமின்றி
அழற்றும்* நெருப்பைபோல் ,என்
மாழைத்* தீ
பாழாய் புகையுதே

சமைத்து பறிமாற
அன்பே நீயின்றி, எதை
சுவைத்து பசியாறும்
என் இளமை நோன்பின்றி

இரவு குளிர்கையில்
இங்கே ஒருவன்
போர்வையின் வெப்பம்
போதாமல் போராடுகிறேன்
மணாளனின் துணையோடு
மஞ்சத்தில் தீக்குளிக்கிறாய் நீ

காணிக்கை பாதுகாப்பது உண்டியலாயினும்
கடைசியில் சேருவதோ பூசாரியிடம்
உன் காதலை சுமந்த
என் உள்ளம் உண்டியலானதே தோழி

கூண்டை விட்டு
கொஞ்ச நேரம் விடுதலை
கொத்தி சீட்டெடுதால்
பசியார நெல்மணி
கிடைக்கும் என்ற அனுதாபத்தில்
கிளி ஜோசியம் பார்ப்பவர்போல
நீயாய் தந்தது அனுதாபமா
நானாய் புரிந்தது காதலா

பசிக்கு கொரிக்க பலகாரம்
பாகனுக்கு கையில் வருமானம்
கிடைக்கும் என்ற பச்சாதாபத்தில்
கோயில் யாணையிடம் ஆசி பெறுவோர்போல்
நீயாய் தந்தது பச்சாதாபமா
நானாய் புரிந்தது காதலா

கூழான சோறு காக்கைக்கு
பாழான சோறு பசுவிற்கு
பரிதாபத்தில் உணவிடுவோர்போல்
நீயாய் தந்தது பரிதாபமா
நானாய் புரிந்தது காதலா

இவை போலதானா
இனியவளே என்னை காதல் செய்தாய்
குழலாக உன்
இதழ் சேர
ஏங்கி இருந்த
மூங்கில் குருத்தை
அடுப்பூததானா
அன்பே அன்பே நீ உடைத்தாய்

தூசி படர்ந்த வீணையின்
துரு பிடித்த தந்திகளை
துடைக்கையில் எழும் அபஸ்வரமாய்
தூண்டபட்டது என் காதல் என நினைத்தாயோ இல்லை

தணித்து இசைக்க முடியாத
தம்புரா என் காதல் என்றென்னி
தள்ளி வைத்து வேறு
திருமனம் செய்து தாம்பத்ய
தவில் வாசிக்க சென்றாயோ

நுழைகையில் கேட்காமல் வந்தாய் பின்
பிரிகையில் மட்டும் ஏனடி கேட்டாய்
அனுதாபம் கொண்டாயா அல்லது
ஆழம் பார்த்தாயா
=====================================================================
*அழற்றும் - எரியும்
*மாழை - இளமை

4 comments:

செல்வேந்திரன் said...

Great Great Great !!!

Ore lovaangiya irukuthe ;-)

yazhini said...

Nalla tamizh......Keep it up

அகிலா said...

//
நீயாய் தந்தது ...
நானாய் புரிந்தது ...//

உவமைகள் நன்றாக வந்திருக்கிறது...

//குழலாக உன்
இதழ் சேர
ஏங்கி இருந்த
மூங்கில் குருத்தை
அடுப்பூததானா
அன்பே அன்பே நீ உடைத்தாய்//

படிக்கும் போது, ஏனோ எனையறியாமல் பெருமூச்சு மேலிடுகிறது. இவ்வரிகளின் அர்த்தங்கள் எனக்கு நிறைய சொல்கின்றன.

Shankar Karthik said...

sorry for asking what is "மருதக்காதல்"?